இந்து மைனர் சொத்தை கோர்ட் அனுமதி இல்லாமல் விற்றால்..!
← Back to News

இந்து மைனர் சொத்தை கோர்ட் அனுமதி இல்லாமல் விற்றால்..!

News Details
Share this news

இந்து மைனர் & கார்டியன்ஷிப் சட்டம், 1956 இன் பிரிவு 8ன் படி, ஒரு மைனரின் இயற்கை கார்டியன் (தந்தை அல்லது தாய்) மைனரின் சொத்துகளை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றவராக இருந்தாலும், அந்த அதிகாரம் முழுவதும் மைனரின் நன்மை மற்றும் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என சட்டம் தெளிவாக கூறுகிறது. குறிப்பாக, மைனரின் அசையாச் சொத்துகளை (Immovable Property) நீதிமன்ற அனுமதி இல்லாமல் விற்க முடியாது என்றும், அத்தகைய விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது மைனரின் அவசியத்திற்காகவும், நலனுக்காகவும் மட்டுமே செய்யப்படுகிறதா என்பதை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் சட்டம் வலியுறுத்துகிறது. நீதிமன்ற அனுமதி பெறாமல், இயற்கை கார்டியன் மைனரின் அசையாச் சொத்தை விற்றிருந்தால், அந்த கிரயம் தானாகவே செல்லாது (void) ஆகிவிடாது. ஆனால் அந்த விற்பனை, மைனர் later-ஆக ரத்து செய்யக்கூடிய (voidable) தன்மை கொண்டதாகும். அதாவது, மைனர் 18 வயது நிறைவு பெற்று மேஜராகிய பின்னர், அந்த சொத்து விற்பனை மைனரின் நன்மைக்காக செய்யப்படவில்லை என்பதை நிரூபித்து, நீதிமன்றத்தின் மூலம் அந்த கிரயத்தை செல்லாது என அறிவிக்க கோர முடியும். அத்தகைய வழக்கை, மைனர் மேஜராகிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது 21 வயதுக்குள் கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த காலவரம்பு, Limitation Act, 1963 இன் பிரிவு 60ன் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 வயது முடிந்த பின்னர், அந்த விற்பனைக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை முற்றிலும் நீங்கிவிடும்; அதன் பின்னர் எந்த நீதிமன்றத்திலும் அந்த கிரயத்தை சவால் செய்ய முடியாது. ஒரே சொத்தில் பல மைனர்கள் பங்குதாரர்களாக இருந்து, கார்டியன் செய்த விற்பனையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது பொதுவாக கூட்டு வழக்காக (Joint Suit) தொடரப்படும். இத்தகைய சூழலில், மூத்த மைனர் 21 வயதை கடந்துவிட்டிருந்தால், அவர் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர முடியாது. ஆனால் இளைய மைனர் இன்னும் 21 வயதுக்குள் இருந்தால், அவர் தனது பங்கிற்கு மட்டும் தனியாக வழக்கு தொடர முடியும். ஆனால், அந்த சொத்து கூட்டுக்குடும்ப சொத்தாக இருந்து, மூத்த மைனர் கர்த்தாவாக (Manager / Karta) செயல்பட வேண்டிய நிலையில் இருந்தால், Limitation Act, 1963 இன் பிரிவு 7ன் படி, மூத்த மைனர் 21 வயதை அடைந்தவுடன், இளைய மைனர்கள் 21 வயதை எட்டாவிட்டாலும் கூட, அனைவரும் சேர்ந்து வழக்கு தொடரும் உரிமையை இழந்துவிடுவார்கள். காரணம், கூட்டுக்குடும்ப சொத்தில் கர்த்தாவின் உரிமை காலாவதியானால், அது தனிப்பட்ட உரிமையாக இல்லாமல் கூட்டான உரிமையாக இருப்பதால், ஜூனியர் உறுப்பினர்களின் உரிமையும் அதனுடன் இணைந்தே பறிபோகும் என சட்டம் விளக்குகிறது.

Copied!